மாரண்டஅள்ளி அருகே, 2 அம்மன் கோவில்களுக்கு ‘சீல்’ - வனத்துறையினர் நடவடிக்கையால் பரபரப்பு
மாரண்டஅள்ளி அருகே 2 அம்மன் கோவில்கள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி வனத்துறையினர் ‘சீல்‘ வைத்தனர். மேலும் கோவில்களை வனத்துறையினர் நடவடிக்கையால் கிராமமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் 2 மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் 2 அம்மன் கோவில்களும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி நேற்று பாலக்கோடு வனச்சரகர் யோகேஷ்குமார் மீனா மற்றும் வனத்துறையினர் ‘சீல்‘ வைக்க சென்றனர்.
இதையறிந்த கிராமமக்கள் திரண்டு வந்து கோவில்களுக்கு ‘சீல்‘ வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் வனத்துறையினர் 2 கோவில்களையும் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். இதையடுத்து கோவில் பூசாரி வெளியில் இருந்து அம்மன்களுக்கு தீபாராதனை காட்டினார். மேலும் கோவில்களை அகற்றுவதாக வனத்துறை சார்பில் கூறப்பட்டதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில் 2 அம்மன் கோவில்களிலும் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் காலம், காலமாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகிறோம். மேலும் ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருகிறோம். தற்போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவில்களுக்கு ‘சீல்‘ வைத்துள்ளனர். மேலும் அம்மன் கோவில்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றுவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story