நாமக்கல்லில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 35 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
நாமக்கல்லில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 35 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ள நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து நாமக்கல்லில் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதேபோல் தாசில்தார் பச்சைமுத்து தலைமையில் மற்றொரு குழுவும் ஆய்வில் ஈடுபட்டது. நாமக்கல் பஸ் நிலையம், மணிக்கூண்டு, கடைவீதி, சேலம் ரோடு, பரமத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை, ஓட்டல்கள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது முககவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்களிடம் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அரசின் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் நகரில் 75 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 35 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.73 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதத்தில் அரசு அறிவித்து உள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வராஜ், சையது காதர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story