வெடிகுண்டு தயாரித்து விற்கும் ‘தீபாவளி தீவிரவாதி’ நடமாடுவதாக ரெயில் நிலையத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு - திண்டுக்கல்லில் விடிய,விடிய போலீசார் அதிரடி சோதனை


வெடிகுண்டு தயாரித்து விற்கும் ‘தீபாவளி தீவிரவாதி’ நடமாடுவதாக ரெயில் நிலையத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு - திண்டுக்கல்லில் விடிய,விடிய போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Sept 2020 6:15 PM IST (Updated: 10 Sept 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு தயாரித்து விற்கும் ‘தீபாவளி தீவிரவாதி‘ திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நடமாடுவதாக கடிதம் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விடிய,விடிய போலீசார் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்ஷெட் அருகே ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அதில், “தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிவதோடு, வெடிகுண்டுகள் தயாரித்து விற்பனை செய்கிறான். அவனை கைது செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை படித்து பார்த்ததும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுக்கும், திண்டுக்கல்லில் வெடிகுண்டு கண்டறியும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸ் படையினர், மோப்பநாய் லீமாவுடன் இரவு ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் விடிய,விடிய சோதனை நடத்தப்பட்டது.

இரவு 11 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று காலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் ரெயில் நிலையத்தில் உள்ள 8 நடைமேடைகள், நடைமேடை பாலம், லிப்டுகள், குட்ஷெட் பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்டனர். அதோடு ரெயில் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதோடு திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில்கள், ரெயில் என்ஜின் ஆகியவற்றிலும் சோதனை செய்யப்பட்டன. ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதேபோல் ரெயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்தும் விசாரித்தனர். மேலும் சந்தேகப்படும் வகையில் யாரும் சிக்கவில்லை.

இதனால் கடிதத்தில் குறிப்பிட்ட தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது. அதன்பின்னரே ரெயில்வே பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர். எனினும், கடிதத்தை எழுதியது யார்?, எந்த ஊரில் இருந்து கடிதம் வந்துள்ளது? என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story