பெரியகுளத்தில் ரூ.24 லட்சத்தில் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி


பெரியகுளத்தில் ரூ.24 லட்சத்தில் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 10 Sept 2020 7:45 PM IST (Updated: 10 Sept 2020 7:38 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் உள்ள பாலத்தில் ரூ.24 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பெரியகுளம்,

பெரியகுளம் நகரின் மைய பகுதியில் வராகநதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் பாலம் அமைக்கப்பட்டது. தண்டுபாளையம் அருகே கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அதேபோல் பொதுமக்களும் பாலத்தில் அடிக்கடி நடந்து செல்கின்றனர். இவர் கள் பாலத்தில் உள்ள சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரை ஒட்டியே நடந்து சென்று வந்தனர். இந்த நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் உறுதித்தன்மையை இழந்து சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் பாலத்தில் சேதமடைந்த நிலையில் இருக்கும் தடுப்புச்சுவரை அகற்றிவிட்டு புதிதாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சேதமடைந்த தடுப்புச்சுவர்கள் அகற்றப்பட்டு ரூ.24 லட்சத்தில் பாலத்தின் இருபுறமும் புதிதாக தடுப்புச்சுவர் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் அனுஷியா ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story