அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு


அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Sept 2020 8:15 PM IST (Updated: 10 Sept 2020 8:10 PM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15.49 கோடி மதிப்பில் 172 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரகாசபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஒன்றாவது பிளாக்கில் கீழ் பகுதியில் 2 வீடுகள் மற்றும் மேல் பகுதியில் 2 வீடுகள் என 43 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்படுகிறது.

இதில் ஒரு வீடு 392 சதுர அடியில் கட்டப்பட்டு வருகின்றது. தேவையான மின்சாரம் கிடைப்பதற்காக தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் மூலம் பணி நடைபெற்று வருகிறது. வீடு கட்டும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகமான பணியாளர்களை பணிக்கு அமர்த்தி மின்விளக்கு மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தி பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் என்னென்ன பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்பதை அலுவலர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றது. சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோக்கால், தூபகண்டி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு தங்குவதற்கு வீடுகள், தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களை அழைத்து பேரூராட்சிகள் மூலம் கூட்டம் நடத்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து பேரூராட்சியில் உள்ள செயல் அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் உடனிருந்தார்.

Next Story