பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீரில் மூழ்கிய காந்தையாறு பாலம் வெளியே தெரிந்தது - உயர்மட்ட பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை


பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீரில் மூழ்கிய காந்தையாறு பாலம் வெளியே தெரிந்தது - உயர்மட்ட பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Sept 2020 9:15 PM IST (Updated: 10 Sept 2020 9:05 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீரில் மூழ்கிய காந்தையாறு பாலம் வெளியே தெரிந்தது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதி உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி இருக்கிறது. லிங்காபுரத்தில் இருந்து அதன் அருகில் உள்ள காந்தவயலுக்கு செல்லும் வழியில் காந்தையாறு குறுக்கிடுகிறது. இதன் அருகே மொக்கைமேடு, காந்தையூர், உளியூர், ஆளூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியதால் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்தபகுதியில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பரிசல் மூலம்தான் ஆற்றை கடக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீரில் மூழ்கிய பாலம் வெளியே தெரிந்து உள்ளது. எனினும் பாலத்தின் மீது 2 அடிக்கும் தண்ணீர் தேங்கி இருப்பதால், கிராம மக்கள் பரிசலில் பயணத்தைதான் மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து காந்தையூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் கூறும்போது, ஆண்டுதோறு ம் பாலம் தண்ணீரில் மூழ்கிவிடுவதால், ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. எனவே காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட அளவில் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றனர்.

Next Story