பெங்களூருவில் இருந்து அரக்கோணத்துக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் - மினிவேனுடன் 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து அரக்கோணத்துக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் - மினிவேனுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2020 4:00 PM GMT (Updated: 10 Sep 2020 3:52 PM GMT)

பெங்களூருவில் இருந்து அரக்கோணத்துக்கு மினிவேனில் கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளை சத்துவாச்சாரி போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

பெங்களூருவிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு மினிவேன் ஒன்றில் குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகள் வேலூர் வழியாக கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையிலான போலீசார் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே அணுகுசாலையில் விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை 7 மணியளவில் அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினிவேனை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில், 50 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. அதைத்தொடர்ந்து மினிவேனை குட்கா, பான்மசாலா பொருட்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர் உள்பட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மினிவேன் டிரைவர் கர்நாடக மாநிலம் அனேகல் தாலுகா பனாஹல்லியை சேர்ந்த நாகராஜூ (வயது 43), மினிவேனிலிருந்த மற்றொருவர் ஆனியகல் தாலுகா ஹெப்பகோடியை சேர்ந்த அப்சான் (26) என்பதும், குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசிக்கும் லட்சுமிபதி என்பவருக்காக கடத்தி செல்வதாகவும் தெரிவித்தனர். கடத்தி வரப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அரக்கோணத்தை சேர்ந்த லட்சுமிபதிக்கு குட்கா கடத்தி வந்தது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் லட்சுமிபதியையும், இதில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story