திராவிட இயக்கத்தில் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறேன் - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி


திராவிட இயக்கத்தில் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறேன் - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2020 4:15 PM GMT (Updated: 10 Sep 2020 4:06 PM GMT)

திராவிட இயக்கத்தில் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்திருப்பதைப் பாராட்டுகிறேன், என காட்பாடியில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

காட்பாடி, 

வேலூர் காட்பாடியில் 36.68 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.16 கோடியே 45 லட்சம் செலவில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அதை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, பார்வையாளர் அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மைதானத்தில் 400 மீட்டர் ஓடுதளம், ஆக்கி, கூடைப்பந்து, கபடி, கோ கோ, இறகு பந்து ஆகிய விளையாட்டு இடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சருக்கு விளக்கி கூறினர்.

ஆய்வின்போது வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி, காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி, அந்தப் பகுதியில் காட்பாடி தாலுகா மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்று தடுப்புப்பணியில் தமிழக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையைப் பார்த்து மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படுகின்றன. தற்போது தொற்றை தடுக்க அதிகளவில் பரிசோதனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை அரசு ரத்து செய்துள்ளது.

மேலும் பஸ், ரெயில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் எளிமையான முறையில் சிகிச்சை பெற மாநிலத்தில் முதல் கட்டமாக 2,000 மருத்துவக் கிளினிக்குகளை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அந்தக் கிளினிக்குகள் மூலம் ஏழை மக்கள் மருத்துவ வசதி பெறுவது எளிதாக இருக்கும். வேளாண் திட்டத்தில் மோசடி என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அவர்களுடைய கடமையை அவர்கள் செய்கிறார்கள்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு எந்த விதத்திலும் பங்கம் வந்து விடக்கூடாது என்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்யக்கூடாது என்றும் அவர்களை கண்காணித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். அவ்வாறு தவறு நடந்திருந்தால் அரசுக்கும், ஆட்சிக்கும் அப்பாற்பட்டு தான் நடந்திருக்க வேண்டும். இருந்தாலும் தவறு எனக் கண்டறியப்பட்டால் அதற்கு முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். திராவிட இயக்கத்தில் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story