கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் சாவு


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் சாவு
x
தினத்தந்தி 11 Sept 2020 2:32 AM IST (Updated: 11 Sept 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் பரிதாபமாக செத்தார்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43). இவர் பிரம்மதேசம் அரசுப்பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேல்முருகன் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று பாதிப்பு உறுதியானது.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு வேல்முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் விரக்தி அடைந்த அவர் கடந்த மாதம் 25-ந்தேதி ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் மாடிப்படி தடுப்புக் கம்பியில் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேல்முருகனை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக செத்தார்.

தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு கடந்த 15 நாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story