தஞ்சை மாவட்டத்தில், கடல் வளத்தை காப்பாற்றி வரும் அலையாத்தி காடுகள் அழிந்து விடாமல் காப்பாற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடல் வளத்தை காப்பாற்றி வரும் அலையாத்தி காடுகளை அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்பகுதிகளில் அரணாக இருந்து கடல்பகுதிகளை காத்துக்கொண்டிருக்கும் அலையாத்தி காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. ஆசியக்கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ள ஒரே பகுதி தமிழகம்தான் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியா உள்ளிட்ட பகுதிகளை உலுக்கி பல உயிர்களை பலிவாங்கிய சுனாமி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட கடல் பகுதிகளை நெருங்காமல் மக்களை காப்பாற்றியது அலையாத்தி காடுகள் தான். அந்த அளவுக்கு மக்களை காப்பாற்றும் சக்தி உடைய இந்த அலையாத்தி காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. மேலும் அலையாத்திகாடுகள் அழிந்து வருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.
இறால், நண்டு, மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல தண்ணீரும் உப்புத்தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளதால். மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர்பகுதிகளை நாடி வருகிறது.
இந்த நிலையில் தற்போது அலையாத்தி காடுகள் அழிந்து வரும் நிலையில் உள்ளது. கடலில் மழைநீர் மற்றும் நல்ல தண்ணீர் கலந்து வந்த நிலைமாறி தற்போது கெமிக்கல் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கலந்து வருவதுதான் இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஒரு காலத்தில் தஞ்சை கடல் பகுதியில் கொடிகட்டிப் பறந்த மீன்பிடிதொழில் தற்போது நலிவடைந்து விட்டதற்கு முக்கிய காரணம் கடல்வளம் குறைந்ததால்தான். கடல்வளம் பெருக வேண்டும் என்றால் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளாகள் கூறுகையில், கடலில் மீன் உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அலையாத்தி மர இலைகள் மக்கி கடலில் கலப்பதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கு இது உணவாக பயன்படுகிறது. குறிப்பாக இறால் மற்றும் நண்டு வகைகள் அலையாத்தி காடுகள் உள்ள பகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும். அவ்வாறு உள்ள பகுதிகளில்தான் இறால் அதிகம் கிடைக்கிறது இதனால் அழிந்துவரும் அலையாத்தி காடுகளை அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story