வேதாரண்யத்தில், வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்


வேதாரண்யத்தில், வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Sep 2020 9:45 PM GMT (Updated: 10 Sep 2020 10:50 PM GMT)

வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தில் மையப்பகுதியில் வேதாமிர்த ஏரி என்று அழைக்கப்படும் பெரிய ஏரி 18 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரி மழை தண்ணீரால் தான் நிரம்பும். இந்த ஏரியில் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குளித்து வருகின்றனர். அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வந்து இந்த ஏரியில் புனித நீராடுவார்கள். கடந்த 27.8.2020 அன்று நாகை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஏரியை கரை கட்டி தண்ணீரை வெளியேற்றி தூர் வாருவதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த ஏரியின் தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணிகளையும், கீழ்கரை மேல்கரைகளில் கான்கிரீட் நடைபாதை அமைப்பதற்கும் ரூ.6கோடியே 50 லட்சத்தில் அடிக்கல் நாட்ட காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில் நேற்று தனியார் உப்பு கம்பெனி நிறுவனத்தின் சார்பில் ராட்சத பம்புகளை வைத்து வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு 18 வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.

வேதாரண்யம் நகராட்சி சார்பில் காந்தி பூங்காவில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட யோகா தியான மண்டபத்தையும் திறந்து வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகத்தையும், கடற்கரை சாலை மற்றும் பூங்காவையும் அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, மேலாளர் மீராமன்சூர், தாசில்தார் முருகு, தனியார் உப்பு கம்பெனி மேலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், ஆணையர்கள் வெற்றிச்செல்வன், ராஜூ, வழக்கறிஞர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story