பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தியதாக மனைவி புகார்: மணப்பாறையில் வங்கி காசாளர் கைது - 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர்
பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்த வங்கி காசாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் அவரை 7 மாதங்களுக்கு பின்னர் மணப்பாறை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் ஒருநாள் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை எடுத்து பார்த்த தாட்சர் அதிர்ச்சி அடைந்தார். அதில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் நிர்வாணமாகவும், அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.
இதையடுத்து தாட்சர் இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதோடு, கொலை மிரட்டல் விடுவதாகவும், பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் தாட்சர் முறையீடு செய்து தன்னிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து எட்வின் ஜெயக்குமாரை உடனடியாக கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால் எட்வின் ஜெயக்குமார் தலைமறைவானார். இதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்தநிலையில் வழக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனாலும் எட்வின் ஜெயக்குமாரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தாலும் கூட அவரின் வங்கிக் கணக்கில் இருந்து சில பணபரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இது ஒரு புறம் இருக்க புகார் கொடுத்தவர், எட்வின் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை உயரதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமார், நேற்று அதிகாலை மணப்பாறை-திருச்சி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மணப்பாறை மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று எட்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மணப்பாறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story