போதிய இடவசதி இல்லாததால் சாலையோரம் குவிக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து முளைக்கும் அவலம் - விரைவாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை


போதிய இடவசதி இல்லாததால் சாலையோரம் குவிக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து முளைக்கும் அவலம் - விரைவாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sept 2020 4:00 AM IST (Updated: 11 Sept 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

போதிய இடவசதி இல்லாததால் சாலையோரம் குவிக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து முளைக்கும் அவலநிலை உள்ளது. இதனால் நெல்லை, விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பி சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை கொள்முதல் செய்ய ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்படும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் விவசாயிகள் கொட்டி குவித்து வைத்துள்ளனர். தஞ்சையை அடுத்த மடிகை, வயலூர் உள்ளிட்ட பல நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவு இடவசதி இல்லை.

இதனால் விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல், சாலையோரத்தில் குவியல், குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 750 நெல் மூட்டைகள் வரை தான் கொள்முதல் செய்யப்படுவதால் 4, 5 நாட்களுக்கு இரவு, பகலாக நெல்லை பாதுகாக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது.

இந்த நிலையை தவிர்க்க நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. டோக்கனில் குறிப்பிடப்படும் தேதியில் நெல்லை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளிடம் அறுவடை செய்த நெல்லை காய வைக்கவோ, பாதுகாக்கவோ போதிய இடவசதி இல்லை.

கிராமங்களிலும் களம் எனப்படும் பொதுஇடமும் இல்லை. இதனால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் நேரடியாக தங்களது பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர். தஞ்சையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நெல் நனையாமல் இருக்க தார்பாய் மூலம் விவசாயிகள் மூடி பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் மழையில் நெல் நனைந்துவிடுகிறது. இப்படி நனைந்த நெல், முளைக்க தொடங்கிவிட்டன.

இதனால் நெல்லை கொட்டி வைக்க போதுமான இடவசதி செய்து கொடுக்க வேண்டும். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஈரப்பதத்தை தளர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 7 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால் காயும் வரை காத்திருக்க வேண்டியது உள்ளது. மழை பெய்தால் திறந்தவெளியில் கிடக்கும் நெல், நனைந்து வீணாகும். நெல்லின் ஈரப்பதமும் அதிகமாகிவிடும். வரும் வாரங்களில் நெல் கொள்முதல் அதிகமாகும்போது இடப்பற்றாக்குறை பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

நேற்று காலை வெயில் அடித்ததால் மடிகை, வயலூர் ஆகிய பகுதிகளில் மழையில் நனைந்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மாலையில் திடீரென மழை பெய்ததால் காய வைத்த நெல்லை அவசர, அவசரமாக குவித்து வைத்து தார்பாய் மூலம் மூடினர். தார்பாய் மூலம் நெல்லை மூடி வைப்பது முழுமையான பாதுகாப்பு இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story