கரூர் நகரப்பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 வாலிபர்கள் கைது
கரூர் நகரப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கரூர்,
கரூர் நகரப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர் தப்பி சென்றார். இதையடுத்து கரூர் நகரப்பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கரூர்-திருச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நரிகட்டியூர் பிரிவு சாலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித்திரிந்த 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்(வயது 24), சணப்பிரட்டியை சேர்ந்த மற்றொரு சந்தோஷ்(23), வெங்கமேட்டை சேர்ந்த கவுதம்(20), திருமாநிலையூரை சேர்ந்த ராமமுர்த்தி(21), வெங்கமேடு இந்திராநகரை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 வாலிபர் களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இரும்பு கம்பி, கத்தி, உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பயங்கர ஆயுதங்களுடன் கரூர் நகரப்பகுதியில் 5 வாலிபர்கள் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story