ஆத்தூர் அருகே, தடுப்பணையில் மூழ்கி மாணவர் சாவு


ஆத்தூர் அருகே, தடுப்பணையில் மூழ்கி மாணவர் சாவு
x
தினத்தந்தி 11 Sept 2020 3:15 AM IST (Updated: 11 Sept 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி 5-வது வார்டு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் மாயக்கண்ணன் (வயது 16). இவர் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதியில் உள்ள விநாயகபுரம் தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் நீச்சல் பழக நேற்று மதியம் மாயக்கண்ணன் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடை ந்து, சத்தம் போட்டனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். உடனடியாக சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாயக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயக்கண்ணனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story