விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
மத்தியஅரசின் மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்களின் அவசர திருத்த சட்டம், வேளாண் விளைப்பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரசட்டம் ஆகியவற்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையில் இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயசங்கத்தினர் ஒருங்கிணைந்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்திலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வாழ்க விவசாயிகள் இயக்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் ஆகிய சங்கங்கள் ஒருங்கிணைந்து 12 ஆயிரம் கையெழுத்துக்களுடன் கோரிக்கை மனு தயாரித்துள்ளனர்.
இந்த கோரிக்கை மனுவை தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கும் வகையிலும், அவசர சட்டங்களை திரும்ப வலியுறுத்தியும் விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழ்க விவசாய இயக்க மாநில தலைவர் காளிராஜ் தலைமையிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் விஜயமுருகன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரமுகர்கள் சவுந்திரபாண்டியன், முருகன், முத்தையா, ரெங்குதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனை தொடர்ந்து 12 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்தான கோரிக்கை மனு தபால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story