பரமக்குடியில் இன்று, இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு - 1,600 போலீசார் குவிப்பு
பரமக்குடியில் இன்று இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஏ.டி.ஜி.பி. தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1,600 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (வெள்ளிக்கிழமை) தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல் மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற்று, சொந்த வாகனங்களில் வந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்தபடி, அரசின் வழிமுறைகளை பின்பற்றி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுதவிர 6 போலீஸ் சூப்பிரண்டுகளும், 8 கூடுதல் சூப்பிரண்டுகளும், 28 போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் எல்லைகளில் 35 சோதனை சாவடிகளும், மாவட்டத்திற்குள் 5 சோதனை சாவடிகளும் என மொத்தம் 40 சோதனை சாவடிகளில் போலீசார் சுழலும் கேமரா கண்காணிப்பில் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.
நினைவிடம் பகுதியில் ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story