பெருமாநல்லூரில், கோழிக்கடையின் பூட்டை உடைத்து திருடிய ஆசாமி கைது
பெருமாநல்லூரில் கோழிக்கடையில் திருடியவனை ஒரு மணிநேரத்தில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கோழிக்கடை நடத்தி வருபவர் ராம்(வயது 52). இவர் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்றுகாலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த எல்.இ.டி. டி.வி, ஹோம்தியேட்டர் மற்றும் கோழிகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவன் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த டி.வி. உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
அந்த ஆசாமி உருவத்தை ஆய்வு செய்தபோது, அவர் பழைய குற்றவாளியான பெருமாநல்லூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஆனந்தராஜ்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜை தேடிய போது,அவர் அங்குள்ள காட்டுபகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆனந்தராஜை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 7-ந் தேதி அதிகாலை கணக்கம்பாளையம், வடக்கு விநாயகர் கோவில் உண்டியலைஉடைத்து அதிலிருந்த பணத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஆனந்தராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கோழி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story