தேனி பஸ் நிலையத்தில் பரபரப்பு: தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயற்சி
தேனியில் நகராட்சி தூய்மைப் பணியாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி,
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 36). இவர் தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல் பணிக்கு வந்தார்.
அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் அவருக்கு பணி வழங்க மறுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் தேனி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள அம்மா உணவகம் அருகில் நின்று கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு கேனில் பெட்ரோலை பிடித்து அதை தனது உடலில் ஊற்றிக் கொண்டார். பின்னர் அவர் நகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். எனவே இதுகுறித்து உடனடியாக நகராட்சி அதிகாரிகள் தேனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று குருநாதன் தீக்குளிப்பதற்குள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அவரை தேனி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story