கடந்த 11 நாட்களில் மாநகர பஸ்களில் ஒரு கோடி பேர் பயணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்


கடந்த 11 நாட்களில் மாநகர பஸ்களில் ஒரு கோடி பேர் பயணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 12 Sept 2020 4:15 AM IST (Updated: 12 Sept 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 11 நாட்களில் மாநகர பஸ்களில் ஒரு கோடி பேர் பயணம் செய்து இருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் கடந்த 1-ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் பஸ்களை இயக்கிட உத்தரவிட்டார். அதன்படி மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கம் தொடங்கியது. மேலும், கடந்த 7-ந்தேதி முதல் மாவட்ட எல்லைக்குள்ளான பஸ் இயக்கத்தினை தளர்த்தி, தமிழகம் முழுவதும் மாநிலத்திற்குள்ளான அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் பயணம் செய்திட ஏதுவாக, பயணிகள் அதிகம் பயணம் செய்யும் தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிருமிநாசினி கொண்டு சுத்தம்

பஸ்கள் உரியமுறையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், கையடக்க கிருமிநாசினி ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் இல்லாத பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள கிருமிநாசினியை பயன்படுத்திய பின்னரே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில், கடந்த 1-ந்தேதியன்று பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு, அன்றையதினம் ஏறத்தாழ 6 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு, ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.

ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம்

குறிப்பாக, மின்சார ரெயில் சேவை உள்ள புறநகர்பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளநிலையில், கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்கள் இயக்கத்தின் வாயிலாக, கடந்த 1-ந்தேதி முதல் தற்போது வரையில் (கடந்த 11 நாட்கள்) ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, ஏறத்தாழ ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story