சென்னை புழல் அருகே 1½ வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை புழல் அருகே 1½ வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2020 4:18 AM IST (Updated: 12 Sept 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

1½ வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் கன்னடபாளையம் ஜீவா 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). இவர், புழலில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரும், செங்குன்றத்தை அடுத்த சாமியார் மடம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மித்ரன் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.

குழந்தையை அடித்தார்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி, தனது குழந்தை மித்ரனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என பாக்கியலட்சுமியை அடித்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை ரஞ்சித்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தையுடன் பாக்கியலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று மாலை 6 மணி அளவில் ரஞ்சித்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பாக்கியலட்சுமி, வீட்டுக்கு எப்போது வருவாய்? என கேட்டார். அதற்கு ரஞ்சித்குமார், நான் வருவதற்கு லேட்டாகும். போனை வை என கூறியதாக தெரிகிறது.

குழந்தையுடன் தற்கொலை

இந்த நிலையில் பாக்கியலட்சுமியின் தாயார் சாந்தி, இரவு 7 மணி அளவில் மகளை பார்க்க வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே ஒரே கயிற்றில் ஒன்றரை வயது குழந்தையும், பாக்கியலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பாக்கியலட்சுமி தனது குழந்தையை முதலில் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

கணவரிடம் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், புழல் இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீசார் தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story