காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்கினார்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Sept 2020 4:22 AM IST (Updated: 12 Sept 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இதுவரை 21 மாவட்டங்களுக்கு அவர் சென்று வந்த நிலையில், நேற்று 22 மற்றும் 23-வது மாவட்டங்களாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 2 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் சேர்ந்தே நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் பென்ஜமின், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஜாண் லூயிஸ், தமிழக செய்தித்துறை மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், மாவட்ட திட்ட அதிகாரி ஸ்ரீதர், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஷ்வரி, கைத்தறித்துறை உயர் அதிகாரி கணேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முப்பெரும் விழா

ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு மேடையில் அடிக்கல் நாட்டு விழா, நிறைவடைந்த கட்டிடங்களின் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.100 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடியே 21 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள் உள்பட ரூ.120 கோடியே 23 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.6 கோடியே 44 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.190 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கட்டிடம் உள்பட ரூ.291 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தார்.

ரூ.331 கோடி நலத்திட்ட உதவி

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.258 கோடியே 83 லட்சம் மதிப்பிலான மகளிர் நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.32 கோடியே 84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட ரூ.331 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அடையாளமாக 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், எஸ்.ஆறுமுகம் மற்றும் தேனரசி சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story