நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் - இந்திய மாணவர் சங்கத்தினர் 7 பேர் கைது
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா சிலையிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை ரெயிலடியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வீரையன், மாவட்டக்குழு உறுப்பினர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அவர்கள், ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வை தமிழக அரசு ஆதரிக்காமல் அந்த தேர்வை ரத்து செய்வதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜெயலலிதா சிலைக்கு செல்வதற்கான படிக்கட்டில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினரை கீழே இறங்குவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஜெயலலிதா சிலையையும், படிக்கட்டையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டனர்.
இதனால் போலீசாருக்கும், இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வலுக்கட்டாயமாக அவர்களை போலீசார் படிக்கட்டில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் கீழே தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை போலீசார் பிடித்து வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் 7 பேரை போலீசார் கைது செய்து தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலையிடம் மனு கொடுத்தது ஏன்? என இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி கூறும்போது, ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடக்கிறது என கூறும் அ.தி.மு.க. அரசு, நீட் தேர்வை ஆதரிக்கிறது. 7 மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடவில்லை. ஜெயலலிதாவை போல் அவர் வழியில் நடப்பதாக கூறும் அ.தி.மு.க. அரசு, நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மனு அளித்தோம் என்றார்.
Related Tags :
Next Story