சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியரும் சாவு - தஞ்சையில் பரிதாபம்


சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியரும் சாவு - தஞ்சையில் பரிதாபம்
x
தினத்தந்தி 12 Sept 2020 4:00 AM IST (Updated: 12 Sept 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், மனைவி இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியரும் இறந்தார். 44 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியினராக வாழ்ந்த இவர்கள் சாவிலும் இணைபிரியாமல் மறைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி நகர் 2-ம் தெருவில் வசித்து வந்தவர் லாரன்ஸ்(வயது 64). பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பாத்திமா மேரி(60). இவர்களுக்கு ஜான் எட்வர்டுராஜ், ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 மகன்களும், கிளைமா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. லாரன்ஸ், பாத்திமாமேரி ஆகியோர் மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பாத்திமா மேரிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு பாத்திமா மேரி இறந்தார். அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மனைவி இறந்த செய்தி அறிந்த லாரன்ஸ் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். வீட்டுக்கு வந்த மனைவியின் உடலை பார்த்தவுடன் அவரால் மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அருகில் சென்ற அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சுயநினைவு இழந்த நிலையில் லாரன்சுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மறுநாள் (9-ந் தேதி) மாலையில் பாத்திமாமேரி இறுதிச்சடங்கு நடந்தது. அவரது உடல் தஞ்சையில் உள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாரன்சின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.

அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலையில் லாரன்ஸ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

திருமணமாகி 44 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் சாவிலும் இணைபிரியாமல் மறைந்ததை அறிந்து உறவினர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.

Next Story