முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு


முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Sept 2020 3:15 AM IST (Updated: 12 Sept 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா(வயது 27). இவருக்கும், குளித்தலை அருகே உள்ள சவரிமேடு பகுதியை சேர்ந்த தவசிமணி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக தவசிமணி பணிபுரிந்து வருகிறார். தனது வேலையை நிரந்தரம் செய்வதற்காக ரூ.5 லட்சம் வரதட்சணையாக பெற்றோரிடம் வாங்கி வருமாறு மனைவி அம்பிகாவிடம் தவசிமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அம்பிகா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் தவசிமணி சவரிமேடு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தனக்கு தெரியாமலும், முதல் திருமணத்தை மறைத்தும், தனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதற்காக அவர் மீதும், இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த ரேவதி, அவரது தாய் தனபாக்கியம், சகோதரர் கனகராஜ், கனகராஜின் மனைவி பாலாமணி ஆகிய 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் அம்பிகா மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து நீதிபதியின் உத்தரவின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் தவசிமணி, ரேவதி, தனபாக்கியம், கனகராஜ், பாலாமணி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story