தாரமங்கலம் அருகே, வாகனம் மோதியதில் கணவன்-மனைவி சாவு - மொபட் ஓட்டி பழகிய போது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மொபட் ஓட்டி பழகிய போது, வாகனம் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னாக்கவுண்டம்பட்டி மூன்று பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). முன்னாள் கவுன்சிலர். இவர் தாரமங்கலம்-சங்ககிரி ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (40). இவர்களுக்கு நேகா (12) என்ற மகளும், நந்தகிஷோர் (10) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனிசாமி, தன் மனைவி மல்லிகாவிற்கு மொபட் ஓட்ட கற்று கொடுத்தார். இதற்காக தாரமங்கலம் புறவழிச்சாலைக்கு மொபட்டில் அவர்கள் சென்று உள்ளனர். அப்போது அந்த சாலையில் மல்லிகா மொபட்டை ஓட்ட, பழனிசாமி பின்னால் அமர்ந்து இருந்தார்.
அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடினார்கள். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பழனிசாமி, மல்லிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், லாரியா? அல்லது வேறு ஏதேனும் வாகனமா? என போலீசார் தேடி வருகின்றனர். மனைவிக்கு மொபட் ஓட்ட பழகி கொடுத்த போது, கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story