கிருஷ்ணகிரி அருகே, தென்பெண்ணை ஆற்றில் 2 வாலிபர்கள் அடித்து செல்லப்பட்டனர் - தேடும் பணி தீவிரம்


கிருஷ்ணகிரி அருகே, தென்பெண்ணை ஆற்றில் 2 வாலிபர்கள் அடித்து செல்லப்பட்டனர் - தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Sept 2020 3:15 AM IST (Updated: 12 Sept 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே கும்மனூர் தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் ஆற்றில் 960 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை சேர்ந்த காதீப்பின் மகன் யாசீர் (வயது19). அவரது சகோதரிகள் மிஸ்பா(21), மோராஜ் (22) மற்றும் பெங்களூருவை சேர்ந்த இர்பான்(26) ஆகியோர் 2 மோட்டார்சைக்கிளில் குளிக்க, கும்மனூர் தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றனர். யாசீர், இர்பான் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, 2 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட சகோதரிகள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் வந்து 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டதால் மீட்க முடியவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கும், தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story