வேலகவுண்டம்பட்டி அருகே, செவிலியர் மீது திராவகம் வீசிய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


வேலகவுண்டம்பட்டி அருகே, செவிலியர் மீது திராவகம் வீசிய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 4:00 AM IST (Updated: 12 Sept 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே அரசு பெண் செவிலியர் மீது திராவகம் வீசிய வழக்கில் கட்டிட மேஸ்திரிகள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது 50). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் முனீஸ்வரி என்பவருடன் சேர்ந்து கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் (25) என்பவரின் மனைவிக்கு 2-வது பிரசவம் பார்த்து உள்ளார்.

பிரசவத்தில் குழந்தை கழுத்தில் கொடி சுற்றி பிறந்ததால், அந்த குழந்தையை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக செவிலியர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அதே மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சரியாக பிரசவம் பார்க்காததால் தனது குழந்தை இறந்துவிட்டதாகவும், தனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறி டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே விஜயகுமாரி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி இலுப்புலியை சேர்ந்த கேசவன் என்கிற நாராயணனுடன் மொபட்டில் மாணிக்கம்பாளையத்திற்கு சென்றார். அப்போது மணிகண்டன், மற்றொரு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் (20) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் விஜயகுமாரியை பின்தொடர்ந்து சென்றனர்.

புளியமரத்துக்கடை பகுதியில் சென்றபோது மணிகண்டனும், விஜயகுமாரும் கேசவன் மற்றும் விஜயகுமாரி மீது திராவகத்தை வீசினர். இதில் விஜயகுமாரி, கேசவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் செவிலியர் விஜயகுமாரியின் மீது திராவகம் வீசிய மணிகண்டன் மற்றும் விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் அழைத்து சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

Next Story