கோத்தகிரி அருகே, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஜீப் - நோயாளி, டிரைவர் மீட்பு
கோத்தகிரி அருகே ஆற்று வெள்ளத்தில் ஜீப் அடித்து செல்லப்பட்டது. அதில் இருந்த நோயாளி, டிரைவரை இளைஞர்கள் மீட்டனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தில் இருந்து செம்மனாரை செல்லும் வழியில் கோழித்தொரை என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலம் பழுதடைந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இதுவரை பணி நிறைவு பெறவில்லை.
இதனால் சோலூர்மட்டத்தில் இருந்து செம்மனாரை செல்லும் மக்கள் பாலத்துக்கு அருகில் உள்ள மண்சாலை வழியாக சென்று வந்தனர். பலத்த மழை பெய்யும்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த மண்சாலையை தண்ணீர் மூழ்கடிப்பது வழக்கம்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சோலூர்மட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது கோழித்தொரையில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள மண் சாலையை வழக்கம்போல் தண்ணீர் மூழ்கடித்தது.
இந்த நிலையில் சோலூர்மட்டத்தில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று செம்மனாரை நோக்கி வந்தது. கோழித்தொரை மண்சாலையில் ஜீப் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஜீப்புக்குள் இருந்த நோயாளி மற்றும் டிரைவர் தண்ணீரில் தத்தளித்தனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள், அவர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் கொட்டும் மழையிலும் ஜீப்பில் கயிறு கட்டி, அதனை அருகில் உள்ள மரத்தில் இணைத்து மேற்கொண்டு ஜீப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாமல் தடுத்தனர். மழை நின்ற பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஜீப் மீட்கப்பட்டது. இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டதால், உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story