முதல்-அமைச்சரின் புகைப்படம் வைப்பதில் தகராறு: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் திடீர் மோதலால் பரபரப்பு
ஊராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் புகைப்படம் வைப்பதில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே திடீர் மோதலால் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கன்னிமுத்து என்பவர் தலைவராக உள்ளார். அவரது அறையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதன்பிறகும் முதல்-அமைச்சர் புகைப்படத்தை அலுவலகத்தில் வைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி தலைவர் கன்னிமுத்து, துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைப்பதற்கு முயற்சி செய்தனர்.
இதனால் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை போலீசார் மற்றும் தெற்கு ஒன்றிய ஆணையாளர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்க விரைந்து வந்து அ.தி.மு.க.-தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பாலசுப்பிரமணியம் அரசு அலுவலகத்தில் கண்டிப்பாக முதல்-அமைச்சர் புகைப்படம் இருக்க வேண்டும் என்றார். இதையடுத்து அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சர் புகைப்படம் வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story