அஞ்சுகிராமம் அருகே கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு - 2 பேருக்கு தீவிர சிகிச்சை


அஞ்சுகிராமம் அருகே கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு - 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 12 Sep 2020 7:00 AM GMT (Updated: 12 Sep 2020 6:21 AM GMT)

அஞ்சுகிராமம் அருகே குடும்பத்தினருடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார். மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஈஸ்வரி (38). இவர்களுடைய மகள் ரவீனா (14). கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் குடும்பத்துடன் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஸ்ரீலெட்சுமிபுரத்துக்கு குடியேறினார். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் குடும்பத்துடன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த மணிகண்டன், ஈஸ்வரி, ரவீனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து 3 பேரும் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 9 மாதங்களாக ஸ்ரீலெட்சுமிபுரத்தில் வசித்து வந்த மணிகண்டன் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், ஆனால் அவர் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன், குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, மகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் தொல்லையால் மனைவி, மகளுடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story