நாகர்கோவிலில், மருத்துவ கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை


நாகர்கோவிலில், மருத்துவ கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Sept 2020 11:30 AM IST (Updated: 12 Sept 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே மருத்துவ கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலில் என்.ஜி.ஓ. காலனி அருகே முகிலன்விளையை சேர்ந்தவர் சீனிவாசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு 3 மகன்கள் இருந்தனர். இவர்களில் 3-வது மகன் சிவனேஷ் (வயது 22). மதுரையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் வீட்டுக்கு வந்தார். அதன்பின்பு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வந்தார். அடுத்த வாரம் கல்லூரி திறக்கப்படுவதாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரிக்கு செல்வதற்காக தயாராகி வந்தார்.

நேற்று காலையில் சிவனேஷ் பல் துலக்குவதற்காக வீட்டின் பின்பக்கம் உள்ள தோப்புக்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சீனிவாசன் மகனை தேடி தோப்புக்கு சென்றார். அப்போது, அங்குள்ள கிணற்றில் சிவனேஷ் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் விரைந்து வந்தனர். அந்த கிணறு சுமார் 100 அடி ஆழமுடையது. இதனால், உறவினர்களால் மாணவனை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மேலும், 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிவனேசை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். உடனே சுற்றி நின்ற உறவினர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்துலக்க சென்ற சிவனேஷ், கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்திருந்து பல் துலக்கி இருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story