லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: கும்பகோணம் அடகு கடைக்காரரின் மனைவி பலி - மகளுக்கு திருமண பொருட்களை வாங்கி வந்தபோது பரிதாபம்
ஆண்டிமடம் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கும்பகோணத்தை சேர்ந்த அடகு கடைக்காரரின் மனைவி பரிதாபமாக இறந்தார். மகளுக்கு தேவையான திருமண பொருட்களை வாங்கி வந்தபோது, இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரியலூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 53). இவர் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அவர் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மனிஷாவை (52) அழைத்துக்கொண்டு காரில் சென்னை சென்றார்.
பின்னர் அங்கு பொருட் களை வாங்கி விட்டு மீண்டும் காரில் கும்பகோணம் வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு கார் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள கூவத்தூர் குடிகாடு கிராம் அருகே விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் சாலையில் வந்து கொண்டிருந்து. அப்போது, சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த சத்தத்தை கேட்டு சாலையோரத்தில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். கார்-லாரி மோதி நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, காரின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற கார் கதவை திறக்க முயன்றனர்.
ஆனால், சேதம் அடைந்து இருந்ததால் கதவை முடியவில்லை. உடனடியாக கடப்பாரை கம்பியை கொண்டு வந்து காரின் கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனிஷாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த நரேஷ்குமார், கார் டிரைவர் திருமுருகன் ஆகியோரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரேஷ்குமார்-மனிஷா தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க சென்னை சென்று திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story