வள்ளியூர் அருகே பயங்கரம்: தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


வள்ளியூர் அருகே பயங்கரம்: தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Sept 2020 5:00 AM IST (Updated: 13 Sept 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 34). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். தற்போது வள்ளியூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று இவரது உறவினர் ஒருவர் வள்ளியூருக்கு வந்திருந்தார். அவரை முத்துராமன் நேற்று இரவு தெற்கு வள்ளியூருக்கு காரில் அழைத்து சென்றார்.

வெட்டிக்கொலை

தெற்கு வள்ளியூரில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மண்எண்ணெய் பேரல் கிடந்தது. உடனே முத்துராமன் காரில் இருந்து கீழே இறங்கி பேரலை ஓரமாக தள்ளினார். அப்போது அங்கு இருளில் மறைந்திருந்த 4 பேர் கும்பல், முத்துராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட முத்துராமனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story