பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டாதவர்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து வந்த வாழ்த்து கடிதம் - மன்னார்குடி மக்கள் அதிர்ச்சி
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டாதவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வந்த வாழ்த்து கடிதத்தால் மன்னார்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு மற்றும் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மன்னார்குடி நகரில் உள்ள மோதிலால் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு சென்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த அரசு அதிகாரிகள் மத்திய அரசின் சார்பில் வீடு கட்டிக் கொடுப்பதாக கூறி அவர்களிடம் இருந்து ரேஷன் கார்டு, ஆதார் எண் போன்றவற்றின் நகல்களை பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் வீடு எதுவும் கட்டி கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்தும், அவற்றை தூய்மையாக பராமரித்தும் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்ற வாசகங்களுடன் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடிதம் வந்துள்ளது. இந்த தெருவில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வாழ்த்து கடிதம் வந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் இந்த பகுதி குடிசை வாழ் மக்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது அந்த குடிசை வீடுகளை ஓரளவு சரி செய்து அதில் வசித்து வரும் இந்த பகுதி மக்களுக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்ததற்கு வாழ்த்து என்றும், கட்டிய வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் பராமரிக்கவும் வேண்டுமென வாழ்த்துச் செய்தி மத்திய அரசிடம் இருந்து கடிதமாக வந்துள்ளது.
இந்த கடிதத்தால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிவாரண தொகை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் பல கோடி ரூபாய் அளவில் நடந்திருப்பது தமிழகம் முழுவதும் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மன்னார்குடி நகர்ப்பகுதிகளில் வீடு கட்டி கொடுக்காமலேயே வீடு கட்டி முடிக்கப்பட்டதாகவும், தனிநபர் கழிப்பறைகள் கட்டி தருவதிலும் முறைகேடு நடந்திருப்பதாக வெளிவரும் தகவலால் ஏழை, எளிய, பாமர மக்கள், அன்றாடம் தினக் கூலி வேலைக்கு சென்று வரும் மக்கள் அரசின் சலுகைகளை பெற முடியாமலும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்தும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story