நாமக்கல்-திருச்சி வழி தடத்தில் குறைவான பஸ்களே இயக்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு - தொட்டியத்தில் கொரோனா பரவும் அபாயம்


நாமக்கல்-திருச்சி வழி தடத்தில் குறைவான பஸ்களே இயக்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு - தொட்டியத்தில் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 13 Sept 2020 3:45 AM IST (Updated: 13 Sept 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் திருச்சி வழி தடத்தில் குறைவான அரசு பஸ்கள் இயக்குவதால் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதல் பஸ்களை விட பொதுமக்கள் கோரிக்கை.

தொட்டியம், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி முதல் அரசு பஸ்கள் மட்டும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தாலும் சில வழித்தடங்களில் குறைவான பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் சுமார் அரை மணி நேரம் பஸ்சுக்காக காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலிருந்து பக்கத்து மாவட்டமான நாமக்கல்லுக்கு கட்டுமான பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தில் குறைவான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொட்டியத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் நாமக்கல்லுக்கு கட்டுமான பணிக்காகவும், கரூர் மாவட்டம் லாலாபேட்டை, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு விவசாய பணிகளுக்காக வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் தினமும் ஏராளமானோர் இப்பகுதியில் வரும் பஸ்களில் பயணம் செய்கின்றனர். குறைவான பஸ்கள் இயக்குவதால் கூட்டம் கூட்டமாக பயணிகள் பஸ்களில் அமரும்போது கொரோனா பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். பயணிகள் யாரும் சமூக இடைவெளி இன்றி முககவசம் இல்லாமலும் பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story