கிருஷ்ணகிரி அருகே, தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு - மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியை சேர்ந்தவர் யாசிர் (வயது 19). துணி வியாபாரம் செய்து வந்தார். இவரும், கர்நாடக மாநிலம், பெங்களூருவை அடுத்த பானசவாடியை சேர்ந்த இர்பான் (26) என்பவரும் சகோதரிகளுடன், நேற்று முன்தினம், கும்மனூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது வாலிபர்கள் 2 பேரும் ஆற்றில் குளித்தனர்.
கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், குளித்து கொண்டிருந்த யாசிர், இர்பான் ஆகிய 2 பேரும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து 2 பேரையும் தேடினார்கள். இருள் சூழ்ந்ததால், வாலிபர்கள் இருவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக, தீயணைப்புத்துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இணைந்து, வாலிபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் யாசிர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இர்பான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, வாலிபரின் உடல் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், இர்பான் உடலை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story