மதுரை அருகே, புதுப்பெண் கொடூரக் கொலை - உடலில் 13 இடங்களில் கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்


மதுரை அருகே, புதுப்பெண் கொடூரக் கொலை - உடலில் 13 இடங்களில் கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்
x
தினத்தந்தி 13 Sept 2020 4:45 AM IST (Updated: 13 Sept 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே புதுப்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 13 இடங்களில் கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மதுரை,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவிடன். இவருடைய மகள் ஜெயசக்தி பாலா (வயது 18). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஜெயசக்தி பாலாவுக்கும், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணமான நேரத்தில் ஜெயசக்தி பாலாவுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை. இதனால் விருதுநகர் மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்தினர். 18 வயது வரும் வரை தம்பதி இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர்.

இதனால் ஜெயசக்தி பாலா வி.அம்மாபட்டி கிராமத்திலேயே கடந்த 3 மாதங்களாக தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஜெயசக்தி பாலா வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.இந்த நிலையில் ஜெயசக்தி பாலா அங்குள்ள கண்மாய் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து பேரையூர் போலீசார் விரைந்து சென்று ஜெயசக்தி பாலாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது உடலில் சுமார் 13 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் பெருமாள் சென்று தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.

மேலும் இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசக்தி பாலா எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. புதுப்பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story