சிதம்பரத்தில், 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
சிதம்பரத்தில் ஒரே நாளில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் 16 கால் மண்டபத்தெருவில் சக்திகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு அந்த கோவிலை அர்ச்சகர் பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறப்பதற்காக அர்ச்சகர் வந்தார்.
அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த உண்டியலை பார்த்தார். அங்கே உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதேபோல் மற்றொரு கோவிலிலும் கொள்ளை நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரம் சுப்பிரமணியன்தெருவில் வல்லபி மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலிலும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் தனித்தனியே புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 கோவில்களிலும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story