கள்ளக்குறிச்சியை தூய்மை நகரமாக மாற்றும் பணி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியை தூய்மை நகரமாக மாற்றும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகரை தூய்மை நகரமாக மாற்றும் வகையில் நகராட்சி, மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இதற்கான தொடக்க விழா, கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஜியாவுல்ஹக் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் 3 குழுக்களாக நகரம் முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களின் வீடுகள், கடை, வணிக நிறுவனங்களில் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து, குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் வீட்டின் முன்பும், தெருக்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வணிக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள்
தங்களிடம் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் பயன்படுத்த இயலாத குப்பைகள் என்று தரம் பிரித்து சேர்க்க வேண்டும். அதாவது மக்கும் குப்பைகளான உணவுக்கழிவுகள், பழம், காய்கறி கழிவுகள், பூ, வாழை இலை, இறைச்சி வகைகள், முட்டை ஓடு, டீ தூள், தோட்டக்கழிவுகள் ஆகியவற்றை வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் நகராட்சி பணியாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
மேலும் மக்காத மறுசுழற்சி குப்பைகளான, பிளாஸ்டிக் பொருட்கள், கந்தல் துணிகள், பாலித்தீன் வகைகள், ரப்பர் பொருட்கள், கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றை வாரத்தில் புதன்கிழமை மட்டும் நகராட்சியிலிருந்து குப்பை சேகரிக்க வரும் நபர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகள் முற்றுலும் உரமாக்கி, மீண்டும் மக்களுக்கே மலிவு விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கள்ளக்குறிச்சியை தூய்மை நகரமாக்கிட அனைவரும் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். நகராட்சி தூய்மை பணியாளர்களை மதிப்புடன் நடத்தி நகராட்சி அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி முன்மாதிரியான நகரமாக கள்ளக்குறிச்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களையும் வீடு வீடாக வழங்கினர்.
இதில் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், தாசில்தார் பிரபாகரன் மற்றும் காவல் துறையினர்கள், நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story