மேட்டுப்பாளையத்தில் காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா? அரசு கால்நடை மருத்துவர் பரபரப்பு தகவல்


மேட்டுப்பாளையத்தில் காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா? அரசு கால்நடை மருத்துவர் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2020 10:15 AM IST (Updated: 13 Sept 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்,

கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகம் நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் காலில் காயங்களுடன் அவதிப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு வனத்துறையினர் பழங்களில் மருந்து வைத்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நோயின் தன்மையை கண்டறிய யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனைப் பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்கவும் கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் சென்னை தலைமை வன உயிரினகாப்பாளர் யுவராஜ் மயக்க ஊசி செலுத்தி யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை யடுத்து அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறப்பு சிறப்புக்குழுவினருடன் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் நித்யா, பவித்ரா மற்றும் வனத்துறையினர் நேற்று மேட்டுப்பாளையம் வனச்சரகம் நெல்லிதுறை வனப்பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தி யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் காட்டு யானை உடலில் அதிக இடங்களில் காயம் உள்ளதால், தந்தத்தை திருடுவதாக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறியதாவது:-

கடந்த 6 மாதங்களாக மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுண்டபட்டிபிரிவு நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை காயத்துடன் சுற்றி வருகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, காட்டு யானையை பிடித்து உரிய சிகிச்சை அளிக்க உள்ளோம். மேலும் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்கள் யானையின் தந்தங்களை திருடுவதற்காக துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட காயங்களா என்று மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே தெரியவரும். யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக சாடிவயல் இருந்து சுயம்பு மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கலீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன. யானைக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த வித அவசரமும் காட்டாமல் மருத்துவ சிகிச்சைக்கான தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னரே துப்பாக்கியில் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story