உடுமலை பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது - கத்தி, அரிவாள் பறிமுதல்
உடுமலை பகுதியில் பண்ணை வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் ஒரு சில குற்ற சமப்வங்கள் நடைபெற்றதையடுத்து போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் நேற்று மதியம் முக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் 5 பேர் அமர்ந்திருந்தனர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் அதே காரில் வேகமாக தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அவர்களை துரத்திச்சென்றனர்.
ஆனைமலை சாலையில் வேகமாக சென்ற கார் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் மோதியது. இதனையடுத்து காரின் முன் பக்கத்திலிருந்த ஒரு ஆசாமி காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினார். இதனால் காரில் 4 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். மேலும் அந்த காரில் வைத்து இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உடுமலை சீனிவாசா வீதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேஷ்(28), சென்னை காசி மேட்டை சேர்ந்த சூர்யா(28) மற்றும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பதும், இவர்கள் அனைவரும் சேர்ந்து உடுமலை பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரிலிருந்து தப்பி ஓடியவர் உடுமலை ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஸ் குமார் என்ற காட்டுப்பூச்சி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தப்பி ஓடிய சதீஸ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவர்கள் எந்தெந்த பகுதிகளில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். இதற்கு முன் எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story