கிணற்றில் பிணம் மீட்பு: நாகர்கோவிலில் மருத்துவ மாணவர் இறந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவர் இறந்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி முகிலன்விளையை சேர்ந்தவர் சிவனேஷ் (வயது 22), மதுரையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படிப்பை தொடர்ந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டின் பின்பக்கம் உள்ள ஒரு கிணற்றில் சிவனேஷ் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பல் துலக்குவதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சிவனேஷ் உடலை மீட்டனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது சிவனேஷ் விழுந்த கிணறு சுமார் 100 அடி ஆழமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனால் கிணற்றுக்குள் இறங்க படிக்கட்டு வசதி இல்லை. பழங்காலத்து குத்துபடி மட்டும் இருந்துள்ளது. அதோடு முக்கியமாக கிணற்றில் தண்ணீர் இல்லை. சிறிது தண்ணீரோடு சேறும், சகதியும் மட்டும் இருந்துள்ளது.
இப்படி இருக்க கிணற்றில் விழுந்த சிவனேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கிணற்றில் இருந்த மோட்டார் மீது விழுந்ததால் சிவனேசின் கழுத்து பகுதியில் பயங்கர காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. அதோடு அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் அவர் உயிருக்காகவும் போராடியிருக்கிறார். மகன் உயிருக்காக போராடும் சத்தத்தை கேட்ட அவரது தந்தை, எப்படியாவது? தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. கிணற்றில் விழுந்த சிவனேசை உடனடியாக மீட்க முடியாததால் அவரது உயிர் பறி போனது.
இதற்கிடையே பலியான சிவனேஷ் உடல் பிரேத பரிசோதனை நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. அவரது உடலை உறவினர்கள் அழுது புலம்பியபடி வாங்கி சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவரின் கனவு பாதியிலேயே கலைந்து விட்டதே என கூறியபடி குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story