வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை: வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்


வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை: வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:30 PM GMT (Updated: 13 Sep 2020 10:45 PM GMT)

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளூர் மக்களுக்கு மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதியிலிருந்து வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர் கள் வந்து மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கடலுக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story