அடகு கடை பூட்டை உடைத்து 31 பவுன் நகை- 18 கிலோ வெள்ளி கொள்ளை - கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சென்றனர்
கும்பகோணம் அருகே அடகு கடை பூட்டை உடைத்து 31 பவுன் நகை- 18 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சென்றனர்.
திருப்பனந்தாள்,
மயிலாடுதுறை பட்டமங்கல தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகன் சாந்திலால் (வயது30). இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திருலோகி கிராமத்தில் அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் அடகு கடையை பூட்டிவிட்டு சாந்திலால் வீட்டுக்கு சென்றார். அப்போது நள்ளிரவு கடைக்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த 31 பவுன் நகை மற்றும் 18 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடைக்கு வந்த உரிமையாளர் கடையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் மற்றும் போலீசார் அடகு கடைக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர். அப்போது கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளது தெரியவந்தது. தஞ்சையில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், கடையில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அடகு கடையின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை- 18 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story