உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை அடித்துக்கொலை - தாய்- கள்ளக்காதலன் கைது


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை அடித்துக்கொலை - தாய்- கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 14 Sept 2020 4:30 AM IST (Updated: 14 Sept 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்றதாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேளாங்கண்ணி,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ராமதாஸ்(வயது 30). அறுவடை எந்திர டிரைவரான இவர் கடந்த 10-ந் தேதி ஒரு பெண் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அவர்கள் இருவரும் குழந்தையை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே குழந்தையின் உடலை மருத்துவமனையில் விட்டு விட்டு ராமதாசும் அவருடன் வந்த பெண்ணும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் மற்றும் அவருடன் வந்த பெண்ணை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே ராமதாஸ் மற்றும் அவருடன் வந்த பெண் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி எழிலரசி(28). மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.

எழிலரசியும், ராமதாசும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தொலைபேசி மூலம் அறிமுகமாகி அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வந்த ராமதாசும், எழிலரசியும் அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். லாட்ஜில் அவர்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை மனுஸ்ரீ அவர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் சரமாரியாக குழந்தை மனுஸ்ரீயை தாக்கி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் மனுஸ்ரீ மயங்கி விழுந்தாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாசும், எழிலரசியும் குழந்தையை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே போட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு வந்த இருவரும் அறையை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசையும் எழிலரசியையும் கைது செய்தனர். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story