புதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை


புதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sept 2020 3:45 AM IST (Updated: 14 Sept 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

புதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் சுகுமாறன், முன்னாள் மாநில செயலாளர் யேசுதாஸ், மாவட்ட செயலாளர் பொன்முடி, மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கை 2020-ஐ இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த கல்வி கொள்கையானது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பு தரும் என கருதுகிறோம்.

இந்த கல்வியானது உயர்கல்வியில் தனியார் மையத்திற்கும், வணிக மையத்திற்கும் உள்ளூர் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியும், அறிவியல் பூர்வமான கல்விக்கு பதிலாக பழமை வாதத்தை திணிப்பதற்கான தீவிர முயற்சியும், ஜனநாயக பூர்வமான நிர்வாகத்திற்கு பதிலாக மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த கல்வி திட்டத்தில் கட்டாய தேர்ச்சி முறையை ஒழிக்கும் வகையில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மும்மொழி திட்டம் வழியாக இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தல், தொழிற்கல்வியை கட்டாயப்படுத்துதல், பள்ளிசாரா கல்வி முறைகளை ஊக்குவித்தல், ஆசிரியர்கள் அல்லாமல் சமூக சேவகர்கள் என்ற பெயரில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தல், பாடப்புத்தகங்ளை மத்திய அரசே தயாரித்து வழங்குதல், தனியார் பள்ளிகளுக்கு கட்டண தொகையை ஏற்றி கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

உயர்கல்வியில் நுழைவதற்கு தேசிய நுழைவு தேர்வினை புகுத்தி கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்லூரி கல்வியில் நுழைவதற்கு முதல் தடையாக இருக்கிறது. கல்லூரி உள்பட பல்கலைக்கழகங்கள் வரை சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு தனியார் மையத்திற்கும் வணிக மையத்திற்கும் வழி வகுக்கிறது. தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் சுயமாக கட்டணம் நிர்ணயம் செய்து கொள்வதற்கு உரிமை வழங்கியுள்ளது.

மொத்தத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, அறிவியல் மனப்பான்மை ஆகியன கைவிடப்பட்டுள்ளன. அதே போன்று மிக முக்கியமாக, மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்வியை எடுத்துக்கொள்ளும் முயற்சியாக இந்த கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் கல்வி கொள்கையை விவாதிக்க வேண்டுமென்றும், தற்போதைய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டுமென்றும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story