தீவிர பரிசோதனைக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு அனுமதி: தஞ்சை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வு - தாமதமாக வந்த 4 மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
தஞ்சை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவ- மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த 4 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தஞ்சையில் பிளாசம் பப்ளிக் பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தாமரை பன்னாட்டு பள்ளி, ரேடியண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம். வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2 மையங்கள், பி.ஆர்.என்ஜினீயரிங் கல்லூரி, பிரிஸ்ட் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, கும்பகோணம் அம்மாசத்திரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, தாமரை பன்னாட்டு பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி.
பேராவூரணியை அடுத்த வீரையன்கோட்டையில் உள்ள அட்லாண்டிக் இன்டர்நேஷனல் பள்ளி, பட்டுக்கோட்டையை அடுத்த உளூரில் உள்ள பிரிலியன்ட் பள்ளி, செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
நீட் தேர்வு நடைபெற்றதையொட்டி மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு இருந்தது. மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு தடுப்புகளும் ஏற்படுத்தி வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்கே வரத்தொடங்கினர். அவர்கள் மையத்தின் அருகே உள்ள இதர பள்ளி வகுப்பறைகளில் தங்கி இருந்தனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். தேர்வு மையத்திற்குள் காலை 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
தேர்வு எழுத சென்ற மாணவர்கள் முக கவசம் அணிந்து சென்றனர். சானிடைசர், தண்ணீர்பாட்டில், ஹால்டிக்கெட் போன்றவற்றை எடுத்துச்சென்றனர்.
மாணவிகள் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி பெற்றோர்களிடம் கழற்றி கொடுத்துவிட்டு சென்றனர். தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு ஆசி வழங்கி பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். அதிக தூரத்தில் இருந்து வந்தவர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற தங்கள் பிள்ளைக்கு உணவு ஊட்டி விட்டு அனுப்பி வைத்தனர்.
தேர்வு மையத்தின் அருகே தேர்வர்களை தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் தேர்வர்கள் நனைந்தபடியே அரங்கத்திற்குள் சென்றனர். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடியும் வரை பெற்றோர்கள் ஆங்காங்கே காத்திருந்தனர். தேர்வு முடிந்து வந்த பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்.
கும்பகோணத்தில் உள்ள தாமரை இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு எழுத 360 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
தேர்வு எழுதும் மாணவர்கள் நேற்று காலை 10 மணி முதலே மையங்களுக்கு வந்தனர். காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கும்பகோணத்தில் உள்ள தாமரை இண்டர்நேஷனல் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இடம் மாறி தஞ்சையில் உள்ள தாமரை இண்டர்நேஷனல் பள்ளிக்கு வந்தனர். இதே போல் தஞ்சையில் தேர்வு எழுத இருந்த மாணவர்களும் சிலர் இடம்மாறி கும்பகோணத்திற்கு சென்றனர்.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று அங்கு சோதனை செய்த போது தான் இடம்மாறி வந்தது தெரிய வந்தது. ஒரே பெயரில் உள்ள 2 பள்ளியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர்.
ஆனால் கும்பகோணம் மையத்தில் தேர்வு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு தஞ்சைக்கு வந்த 4 மாணவிகள், பின்னர் அவசர, அவசரமாக கும்பகோணம் சென்றனர். தேர்வு 2 மணிக்கு தொடங்கியதாலும், மாணவிகள் 2.20 மணிக்கு தேர்வு மையத்தை அடைந்ததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து மாறி, மாறி அலைந்தும் தங்களால் தேர்வு எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் 4 மாணவிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story