திருச்சி விமான நிலையத்தில் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்


திருச்சி விமான நிலையத்தில் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்
x
தினத்தந்தி 14 Sept 2020 4:00 AM IST (Updated: 14 Sept 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி துபாய் நோக்கி இரவு 1.20 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 138 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது அருகிலிருந்த ரேடார் கருவி மற்றும் சுற்றுச்சுவரை இடித்து மேலே எழும்பியது.

இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் விமான பைலட்டுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக விமானத்தை தரையிறங்க கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து எதுவும் அறியாத பைலட் உடனடியாக தனக்கு இதுகுறித்து எந்தவிதமான சத்தமும் எழவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

அப்போது விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் விமானத்தின் சக்கரத்தில் சுற்றியிருந்த அறிந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை உணர்ந்தனர். இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஆணையத்தின் சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த விமானத்தை ஓட்டிய இரு பைலட்டுகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த விசாரணை முடிவில் இரண்டு விதமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட இருந்ததால் இதன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது இந்த விபத்திற்கு பைலட் தான் காரணம் என்று ஒரு தரப்பும் தொழில்நுட்ப பிரிவு தான் காரணமென ஒரு தரப்பும் தெரிவித்து வருவதால், இதுவரை இடைநிலை அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக விமானத்தை ஓட்டிய பைலட் ஒருவர் தன்னிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படாமல் தங்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தும் தங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தங்களது அறிக்கையை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது ஆணையத்தின் விதி.

ஆனால் விபத்து ஏற்பட்டு சுமார் 30 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை இது குறித்த இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. மேற்கண்ட விபத்து குறித்து தீர்வு ஏற்பட்டால் இனி வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக இருக்கும்.

Next Story