சம்பா சாகுபடியில் உரச்செலவை குறைக்க சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிடும் விவசாயிகள்


சம்பா சாகுபடியில் உரச்செலவை குறைக்க சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 14 Sep 2020 2:48 AM GMT)

சம்பா சாகுபடியில் உரச்செலவை குறைக்க சணப்பை, தக்கைப்பூண்டை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

ஆதனக்கோட்டை,

சம்பா பருவத்தில் நடவு செய்யும் விவசாயிகள் இயற்கை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு அதிகமான நைட்ரஜனை பயிர்களுக்கு கிரகித்து செலவினை குறைத்து அதிக லாபம் பெறுகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்தில் விவசாயிகள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய சணப்பை, தக்கைபூண்டு போன்றவற்றை பயிரிட்டு சம்பா சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்கின்றனர்.

இவ்வாறு இயற்கை பசுந்தாள் பயிரான சணப்பை மற்றும் தக்கை பூண்டை பயிரிடுவதால் நடவு செய்வதற்கு 40 முதல் 45 நாட்களுக்கு முன்னரே எக்டேருக்கு 50 கிலோ வீதம் விதைப்பு செய்து 45-வது நாளில் இந்த பூண்டுகளை மடக்கி உழவு செய்வதால் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி வேர் மூலமாக மண்ணுக்கு தருகிறது. மேலும், தழை நன்கு மக்குவதால் கரிம, கனிம சத்துக்களை பயிருக்கு கொடுப்பதால் நீர் உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. இதனால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக உற்பத்தி ஆவதால் விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமான நெல் மணிகள் கிடைக்கும்.

சணப்பையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சித்த வைத்தியத்தில் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படுகிறது. சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிடுவதால் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களை குறைவாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் எக்டேருக்கு ரூ.7,500 வரை உரச் செலவை மிச்சப்படுத்தலாம். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு களர் உவர் நிலத்திற்கு ஏற்றதாகும். 1½ மீட்டரிலிருந்து 2 மீட்டர் வரை வளரக்கூடிய சணப்பை ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 டன் வரை தழைகள் கிடைக்கும். ஒரு எக்டேருக்கு 40 லிருந்து 50 கிலோ வரை தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம்.

ஒரு பயிர் நன்கு வளர வேண்டுமென்றால் தழைச்சத்து (நைட்ரஜன்), மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து(பொட்டாஷ்) போன்ற முதன்மை உரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. துணை சத்துக்களான துத்த நாகம், மாங்கனீஸ், மக்னீசியம், கந்தகம், கார்பன், சல்பர் போன்ற 16 வகையான சத்துக்கள் ஒவ்வொரு தாவர வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. சணப்பை விதைகள் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு வெளிச்சந்தையில் கிடைக்கிறது. இதையே வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கினால் உற்பத்தி செலவு குறைந்து அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், நஷ்டத்தில் இருந்து மீளலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

Next Story